திங்கள், 25 ஏப்ரல், 2022

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக

 பாராட்டுக் கடிதம்

நண்பனுக்குக் கடிதம் 


சங்கரலிங்கபுரம்,

26-04-2022.


அன்புள்ள நண்பா,

     நலம். நலம் அறிய ஆவல். கடந்த வாரம் மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் உன்னது தலைமையிலான அணி முதல் பரிசை பெற்றதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன். உள்ளம் மகிழ்ந்தேன். 

     எப்போதும் தேனீ போலச் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் நீ, தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நீ, படிப்பையும் கல்வியையும் இரு கண்களாகக் கருதும் நீ, எடுத்த செயலில் ஆர்வத்துடனும் முழு முயற்சியுடனும் செயல்படும் நீ எதிலும் வெற்றி பெறுவாய் என்பதை நான் அறிவேன். உனது வெற்றிப் பயணம் தொடரட்டும். தேசிய, உலக அளவிலான பல போட்டிகளிலும் பங்கு பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று உன்னை வாழ்த்துகிறேன்.


நன்றி

இப்படிக்கு,

அன்பு நண்பன்,

எழில் 


உறைமேல் முகவரி 

பெறுநர்

தமிழ்,

4/4, தென்றல் நகர்,

விருதுநகர்.











நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

முன்னுரை

     நாம் கல்வியில் முதல் இடத்தில் இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்கு சமமானதாகும். அவ்விதம் நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நோய் வரக் காரணங்கள்:

     இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையை பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுக்குக் காரணமாகும். துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம். மாசு நிறைந்த சுற்றுச்சூழல் நோய்க்குக் காரணமாகின்றது. இயற்கை வேளாண்மையை மறந்து நல்ல விளைச்சல் வேண்டி நவீன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி நிலத்தை மாசுபடுத்திவிட்டோம். இவ்வகை உணவினால் நோய்கள் அணுகுவதற்கு நாமே காரணமாகி விட்டோம்.
நோய் தீர்க்கும் வழிமுறைகள்
நாம் உண்ணும் உணவின் அளவை அறிந்து உண்ணுவது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது, நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது, நோயின் நிலை அறிந்து அதற்கேற்ற உணவையும் மருந்துகளையும் உட்கொள்வது போன்றவை நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். அப்போதுதான் நோய்கள் நம்மை அணுகாது. வீட்டின் உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் சுத்தத்தைப் பேண வேண்டும். ஈ, கொசு போன்றவை நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காத்தல்

     பருவநிலைகள் மாறும்போது அதற்கேற்ற உணவுகளை உண்ணுதல் அவசியம். கோடைகாலத்தில் பழச்சாறுகளை அருந்தலாம்.  மழைக்காலத்தில் சளிப் பிடிக்காமல் இருக்கவும் காய்ச்சல் வராமல் இருக்கவும் நம் தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து அவற்றைப் பின்பற்றுதல் வேண்டும். சிறுவர்களுக்கான ஆரோக்கிய உணவுகளை அறிந்து அவற்றைக் கொடுக்கவேண்டும். "நோய்நாடி நோய்முதல் நாடி" என்ற வள்ளுவரின் வாக்கின்படி, நோயை அறிந்து அவை முதிர்ந்து நம்மை துன்புறுத்துவதற்கு முன் அந்நோயை முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.

உணவும் மருந்தும்

     உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்று கூறினால் அது மிகையாகாது. உணவைத் தகுந்த நேரத்தில், ஏற்ற அளவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தகர்க்க வேண்டும். இரவு எளிமையான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடலைப் பேணும் வழிமுறைகள் ஆகும்.

உடற்பயிற்சியின் தேவை

     நாம் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது.  "ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று பாடிய பாரதியார் உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் சுறுசுறுப்புடனும் மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உண்மையாகும். இதனைக் கவிமணி, "காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஒடிப் போவானே" என்கிறார்.

முடிவுரை

     நோயற்ற வாழ்விற்கு சுகாதாரம் அவசியம். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற ஔவையாரின் வாக்குப்படி நமக்கு கிடைத்த இவ்வுடலை நோயின்றிப் பேணுவது நம் கடமையாகும்.

இருப்பிட சான்று வேண்டி விண்ணப்பம்

இருப்பிடச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்


அனுப்புநர்

எழில்
4/4, முல்லை நகர்,
விருதுநகர்.

பெறுநர்

உயர்திரு, வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
விருதுநகர்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: இருப்பிடச் சான்று வேண்டுதல் சார்பு...


     வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் நிரந்தரமாகக் குடியிருந்து வருகிறேன். நான் அரசின் உதவிகளைப் பெற ஏதுவாக, எனக்கு இருப்பிடச் சான்று வழங்க உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி

இடம்: விருதுநகர்.                         இப்படிக்கு,
நாள்: 26-04-2022.                   உண்மையுள்ள,
எழில்

உறைமேல் முகவரி

பெறுநர்

உயர்திரு. வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
விருதுநகர்.


நூலகம்

நூலகம்

முன்னுரை

     "ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்" என்பது பழமொழி; "நூலகம் இல்லாத ஊருக்கு அறிவு பாழ்" என்பது புதுமொழி. நூலகம் ஒருவருடைய அறிவை விரிவடையச் செய்து முழு மனிதனாக்குகிறது. நூலகத்தின் பயன்கள், நூலகத்தின் வகைகள், நூலகத்தில் படிக்கும் முறை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

நூலகத்தின் தேவை

     நல்ல நூல்கள் அரண்மனைகளிலும் மடங்களிலும் கிடந்து, கரையான்களுக்கு இரையாகி, வீணாகி விடக்கூடாது. ஒரு நாடு வளம் பெற வேண்டுமாயின் அந்நாட்டு மக்கள் அறிவு வளம் பெற்றவர்களாக மாற வேண்டும். அதனை நிறைவு செய்யவே நூலகங்கள் உருவாயின. நூலகங்கள் "நடு ஊருள் பழுத்த பயன் மரம் போல" அனைவருக்கும் பயன் தரும்.

நூலகத்தின் வகைகள்

     நூலகத்தின் தன்மை அடிப்படையில் நூலகத்தை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம். அவை,
  1. பொது நூலகங்கள் 
  2. தனியார் நூலகங்கள் 
  3. நடமாடும் நூலகங்கள் 
  4. மின் அணு மூலகங்கள் 
  5. ஆவணக் காப்பகங்கள்

நூலகத்தில் உள்ளவை

     குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான தகவல்களை அள்ளித் தருபவையாக நூலகங்கள் உள்ளன. சிறுகதைகள், கட்டுரைகள் நூல்கள், வியப்பூட்டும் அறிவியல் நூல்கள், கவிதை நூல்கள், இலக்கியங்கள், அரசியல் பொருளாதார நூல்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நூல்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவ நூல்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் வரலாற்று நூல்கள் எனப் பல வகை நூல்கள் நூலகத்தில் இடம் பெறும்.

படிக்கும் முறை

  1. நூலகத்தில் அமைதி காக்க வேண்டும்
  2. புத்தகங்களை வரிசைப்படி வைக்க வேண்டும்
  3. புத்தகங்களைச் சேதப்படுத்த கூடாது
  4. உரிய அனுமதியின்றி புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது
  5. மனத்திற்குள் வாசிக்க வேண்டும்
  6. புத்தகத்தில் எதுவும் குறிக்கக்கூடாது

முடிவுரை

     விலைமதிப்பற்ற புத்தகங்கள் பொது நூலகங்கள் மூலம் ஏழைகளும் படித்து பயன்பெறும் வகையில் உள்ளன. எனவே, அவற்றின் நன்மை கருதி, நூலகங்களை உரியமுறையில் பயன்படுத்திப் பயன்பெறுங்கள், அறிவுச்செல்வம் பெறுங்கள்.

நான் விரும்பும் கவிஞர் பாரதியார்

நான் விரும்பும் கவிஞர் பாரதியார்

முன்னுரை

     "அச்சமில்லை அச்சமில்லை" என்று தம் கவிதைகள் மூலம் நம்மிடையே விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி பாரதியாரே நான் விரும்பும் கவிஞர் ஆவார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்!

இளமைப் பருவம்

     தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னச்சாமி இலக்குமி அம்மையார் இணையருக்கு 11-12-1882 அன்று பாரதியார் பிறந்தார். பைந்தமிழ்ப் பாவலராய்த் திகழ்ந்து 'பாரதி' என்னும் பட்டம் பெற்றார். பாரதி என்னும் சொல்லுக்குக் 'கலைமகள்' என்று பொருள்.

விடுதலை வேட்கை

     "ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி" என்று வீர முழக்கம் செய்தார்; கவிதைகளாலும் கட்டுரைகளாலும் விடுதலை வேட்கையைத் தூண்டினார். கேலிச்சித்திரம் மூலம் பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் கருத்துகளை விதைத்தார். கவிஞராகவும் இதழாசிரியராகவும் விடுதலைக்கு உழைத்தார்.

சமுதாயத் தொண்டு

     "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று பாடி பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்தார். "குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று பாடி சமூக விடுதலைக்குக் குரல் கொடுத்தார்.

இயற்றிய நூல்கள்

     பாரதியார் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, ஞானரதம், புதிய ஆத்திசூடி, சந்திரிகையின் கதை, தராசு முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

சிறப்புப்பெயர்கள்

     பாரதியார் மகாகவி, தேசியக்கவி, முண்டாசு கவிஞன் என்று சிறப்பிக்கப்படுகிறார். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, புதிய அறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் புகழப்படுகிறார்.

முடிவுரை

     தேச விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேசியக்கவி பாரதியார் 11-09-1921 அன்று மறைந்தார். எனினும் உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும்.

திங்கள், 18 ஏப்ரல், 2022

எட்டாம் வகுப்பு இயல் 9 கட்டுரை – உழைப்பே உயர்வு

 

எட்டாம் வகுப்பு இயல் 9 கட்டுரை – உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு


முன்னுரை

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்”என்னும் வள்ளுவரின் குறள், உழைப்பின் சிறப்பைக் காட்டுகிறது. “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று பாரதியார் பாடியது எதனால்? உழைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால்… ‘உழைப்பே உயர்வு தரும்’ என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிவோம்.


உழைப்பின் பெருமை

எத்தகைய இழிந்த நிலையில் இருந்தாலும் ஒருவன், தன்னுடைய உழைப்பைத் தொடர்வானேயானால் அவன் உறுதியாக வெற்றி பெறுவான். செல்வம் அவனைத் தேடி வந்து சேரும். அவனுடைய வறுமையும் அவனுடைய சுற்றத்தாரின் வறுமையும் விலகும். உழைப்பு ஒருவனுடைய குடிப் பெருமையை உயர்த்தும்.


ஒருவன் செல்வம், நிலைத்த புகழைப் பெற விரும்பினால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது கடின உழைப்பே. அதைத்தவிர வேறு குறுக்கு வழிகள் என்று எதுவும் இல்லை. அதனால்தான் பெரியோர்கள், “கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை” என்கிறார்கள்.


உழைப்பால் உயர்ந்தவர்கள்

தன்னுடைய தன்னலமற்ற சேவையாலும் கடின உழைப்பாலும் தெரசா, அன்னை தெரசா ஆனார். நாட்டின் விடுதலையையே நோக்கமாகக் கொண்டு போராடிய காந்தி, மகாத்மா காந்தி ஆனார். தனது அயராத கடின உழைப்பால் அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி ஆனார். தேச வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டு உழைத்த நேரு, பட்டேல், இந்திரா, மொரார்ஜி தேசாய் ஆகியோர் தம்முடைய கடின உழைப்பால் உயர்ந்தவர்களே.


உழைப்பே உயர்வு

“உழைப்பின்றி ஊதியம் இல்லை” என்பார்கள். நாம் ஒரு முறை படித்த பாடம் மறந்து விடலாம். இரண்டு… மூன்று… நான்கு… ஐந்து முறை படித்த பாடம் கொஞ்சம் மறந்து போகலாம். பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது முறை படித்த பாடம் எப்போதும் மறப்பதில்லை. அது மட்டுமல்லாது அதில் நாம் பண்டிதன் ஆகலாம். ஒரு முறை படித்தவன் படிப்பாளி. ஐம்பது முறை படித்தவன் பண்டிதன். பண்டிதனாக்கியது எது? அவனுடைய கடின உழைப்பு. உழைப்பே உயர்வு தரும். உழைப்பில் நம்பிக்கை கொண்டவரை அந்த வானம் உச்சிமுகர்ந்து பாராட்டும்.


முடிவுரை

ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுநீரில் மாசுகள் படிவதில்லை. உழைத்துக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில் தோல்வி அடைவதில்லை. “எறும்பு ஊரக் கல்லும் தேயும்” என்பார்கள். எடுத்துக்கொண்ட செயலில் தோற்றுக் கொண்டே இருப்பவன் செய்ய வேண்டியதெல்லாம் இடைவிடாத உழைப்பு. உழைப்பின் வியர்வைகளில் உள்ள உன்னதம் எதிலும் இல்லை. எனவே, உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொள்வீர்! இமயத்தையும் வெல்வீர்!!

எட்டாம் வகுப்பு கட்டுரை- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

 

எட்டாம் வகுப்பு கட்டுரை- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

முன்னுரை

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்று பாடுகிறார் காந்தியக் கவிஞர். கைத்தொழிலால் பொருளாதார நன்மை மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு, மன வளம் பேணுதல், பசுமைச் சூழல் பாதுகாப்பு போன்ற நன்மைகளும் விளைகின்றன. நமக்கு பிடித்த ஏதேனும் ஒரு கைத் தொழிலை கற்றுக் கொள்வதன் அவசியத்தை அலசுகிறது இக்கட்டுரை.


கைத்தொழில் என்பது

எளிய மூலப் பொருள்களைக் கொண்டு குறைந்த செலவில் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் பொருட்களைக் கைகளாலோ அல்லது எளிய கருவிகளின் துணை கொண்டோ உருவாக்குவதாகும். கைத்தொழில் ஒரு மரபு சார்ந்த தொழில் மட்டும் அன்று; கற்றுக் கொள்வதும் எளிது. நமது பாரம்பரியத்தோடு இரண்டறக் கலந்தது.


பல்வகைக் கைத்தொழில்கள்

பெரும்பாலான கைத்தொழில்கள் வேளாண் பொருள்கள் சார்ந்தவை. இயற்கையோடு இயைந்தவை. கூடை முடைதல், பாய் பின்னுதல், சிற்பம் வடித்தல், மட்பாண்டம் செய்தல், தேன் சேகரித்தல், மெழுகுப் பொருட்கள் தயாரித்தல், பனைப் பொருட்கள் தயாரித்தல், மூங்கில் பொருட்கள் தயாரித்தல், இரும்புக் கருவிகள் செய்தல், செப்புப் பாத்திரங்கள் செய்தல், வெண்கலப் பாத்திரங்கள் செய்தல் போன்றவை கைத்தொழில்கள் ஆகும்.


கைத்தொழில் கற்பதன் அவசியம்

கைத்தொழில் நம் மரபு, பண்பாடு சார்ந்த தொழில்களாகும். கைத்தொழில் கற்பதால் நமது பொருளாதாரத் தேவை பூர்த்தி அடைகிறது. போட்டி நிறைந்த உலகில் வேலைக்காக எங்கும் அலைய வேண்டியதில்லை. நமது உலகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்புகளால் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. அதோடு, அவை வெளியேற்றும் கழிவுகளும் மலையளவு குவிந்து வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைகிறது. ஆனால், கைத்தொழில்களால் வெளியேறும் கழிவுகள் மிகவும் குறைவு. மேலும், அவை சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதில்லை.


கைத்தொழிலின் நன்மைகள்

கைத்தொழில் பலருக்கு வேலை தருகிறது; சுற்றுச்சூழல் நண்பனாகத் திகழ்கிறது. நாம் விரும்பும் நேரத்தில், ஓய்வு நேரத்தில் கைத் தொழிலில் ஈடுபடலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வழியில் கழிக்கலாம். மனத்திற்குப் பிடித்த கைத்தொழில் ஒன்றில் ஈடுபடும் போது நம் மனம் நிறைவு கொள்கிறது; ஆத்ம திருப்தி ஏற்படுகிறது; சிந்தை விரிவடைகிறது; கவலைகள் மறக்கப்படுகின்றன.


தொழிற்கல்வி

பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் கல்வியோடு தொழிற் கல்வியும் கற்றுத் தரப்படுகிறது. இது மாணவர்களின் அறிவை வளர்ப்பதோடு அனுபவக் கல்வியையும் தருகிறது. “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற தாராபாரதியின் வரிகளை நினைவில் நிறுத்தி தொழிற்கல்வியில் பெற்றிடுவோம்.


முடிவுரை

மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து அடிப்படைப் பொருள்களும் கைத்தொழில் மூலமாக உற்பத்தி செய்ய முடியும்போது அந்நிய நாடுகளை ஏன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? சிறுசிறு கைத்தொழில்களை நாமே செய்தால் சோம்பி இருத்தலால் ஏற்படும் நோய்கள் நம்மை அண்டாது. மேலும் நமது மன நலம் சிறப்படையும்; அந்நியச் செலாவணி மிச்சப்படும்; நம் நாடும் பொருளாதார வல்லமை பெற்றுத் திகழும். எனவே, கைத்தொழிலின் அருமையை அனைவரும் உணர வேண்டும். ஏதேனும் ஒரு கைத் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.