நூலகம்
முன்னுரை
"ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்" என்பது பழமொழி; "நூலகம் இல்லாத ஊருக்கு அறிவு பாழ்" என்பது புதுமொழி. நூலகம் ஒருவருடைய அறிவை விரிவடையச் செய்து முழு மனிதனாக்குகிறது. நூலகத்தின் பயன்கள், நூலகத்தின் வகைகள், நூலகத்தில் படிக்கும் முறை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
நூலகத்தின் தேவை
நல்ல நூல்கள் அரண்மனைகளிலும் மடங்களிலும் கிடந்து, கரையான்களுக்கு இரையாகி, வீணாகி விடக்கூடாது. ஒரு நாடு வளம் பெற வேண்டுமாயின் அந்நாட்டு மக்கள் அறிவு வளம் பெற்றவர்களாக மாற வேண்டும். அதனை நிறைவு செய்யவே நூலகங்கள் உருவாயின. நூலகங்கள் "நடு ஊருள் பழுத்த பயன் மரம் போல" அனைவருக்கும் பயன் தரும்.
நூலகத்தின் வகைகள்
நூலகத்தின் தன்மை அடிப்படையில் நூலகத்தை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம். அவை,
- பொது நூலகங்கள்
- தனியார் நூலகங்கள்
- நடமாடும் நூலகங்கள்
- மின் அணு மூலகங்கள்
- ஆவணக் காப்பகங்கள்
நூலகத்தில் உள்ளவை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான தகவல்களை அள்ளித் தருபவையாக நூலகங்கள் உள்ளன. சிறுகதைகள், கட்டுரைகள் நூல்கள், வியப்பூட்டும் அறிவியல் நூல்கள், கவிதை நூல்கள், இலக்கியங்கள், அரசியல் பொருளாதார நூல்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நூல்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவ நூல்கள், வாழ்க்கை வரலாறு மற்றும் வரலாற்று நூல்கள் எனப் பல வகை நூல்கள் நூலகத்தில் இடம் பெறும்.
படிக்கும் முறை
- நூலகத்தில் அமைதி காக்க வேண்டும்
- புத்தகங்களை வரிசைப்படி வைக்க வேண்டும்
- புத்தகங்களைச் சேதப்படுத்த கூடாது
- உரிய அனுமதியின்றி புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது
- மனத்திற்குள் வாசிக்க வேண்டும்
- புத்தகத்தில் எதுவும் குறிக்கக்கூடாது
முடிவுரை
விலைமதிப்பற்ற புத்தகங்கள் பொது நூலகங்கள் மூலம் ஏழைகளும் படித்து பயன்பெறும் வகையில் உள்ளன. எனவே, அவற்றின் நன்மை கருதி, நூலகங்களை உரியமுறையில் பயன்படுத்திப் பயன்பெறுங்கள், அறிவுச்செல்வம் பெறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக