எட்டாம் வகுப்பு இயல் 9 கட்டுரை – உழைப்பே உயர்வு
உழைப்பே உயர்வு
முன்னுரை
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்”என்னும் வள்ளுவரின் குறள், உழைப்பின் சிறப்பைக் காட்டுகிறது. “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்று பாரதியார் பாடியது எதனால்? உழைப்பின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால்… ‘உழைப்பே உயர்வு தரும்’ என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிவோம்.
உழைப்பின் பெருமை
எத்தகைய இழிந்த நிலையில் இருந்தாலும் ஒருவன், தன்னுடைய உழைப்பைத் தொடர்வானேயானால் அவன் உறுதியாக வெற்றி பெறுவான். செல்வம் அவனைத் தேடி வந்து சேரும். அவனுடைய வறுமையும் அவனுடைய சுற்றத்தாரின் வறுமையும் விலகும். உழைப்பு ஒருவனுடைய குடிப் பெருமையை உயர்த்தும்.
ஒருவன் செல்வம், நிலைத்த புகழைப் பெற விரும்பினால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது கடின உழைப்பே. அதைத்தவிர வேறு குறுக்கு வழிகள் என்று எதுவும் இல்லை. அதனால்தான் பெரியோர்கள், “கடின உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை” என்கிறார்கள்.
உழைப்பால் உயர்ந்தவர்கள்
தன்னுடைய தன்னலமற்ற சேவையாலும் கடின உழைப்பாலும் தெரசா, அன்னை தெரசா ஆனார். நாட்டின் விடுதலையையே நோக்கமாகக் கொண்டு போராடிய காந்தி, மகாத்மா காந்தி ஆனார். தனது அயராத கடின உழைப்பால் அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி ஆனார். தேச வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டு உழைத்த நேரு, பட்டேல், இந்திரா, மொரார்ஜி தேசாய் ஆகியோர் தம்முடைய கடின உழைப்பால் உயர்ந்தவர்களே.
உழைப்பே உயர்வு
“உழைப்பின்றி ஊதியம் இல்லை” என்பார்கள். நாம் ஒரு முறை படித்த பாடம் மறந்து விடலாம். இரண்டு… மூன்று… நான்கு… ஐந்து முறை படித்த பாடம் கொஞ்சம் மறந்து போகலாம். பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது முறை படித்த பாடம் எப்போதும் மறப்பதில்லை. அது மட்டுமல்லாது அதில் நாம் பண்டிதன் ஆகலாம். ஒரு முறை படித்தவன் படிப்பாளி. ஐம்பது முறை படித்தவன் பண்டிதன். பண்டிதனாக்கியது எது? அவனுடைய கடின உழைப்பு. உழைப்பே உயர்வு தரும். உழைப்பில் நம்பிக்கை கொண்டவரை அந்த வானம் உச்சிமுகர்ந்து பாராட்டும்.
முடிவுரை
ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுநீரில் மாசுகள் படிவதில்லை. உழைத்துக் கொண்டிருப்பவன் வாழ்க்கையில் தோல்வி அடைவதில்லை. “எறும்பு ஊரக் கல்லும் தேயும்” என்பார்கள். எடுத்துக்கொண்ட செயலில் தோற்றுக் கொண்டே இருப்பவன் செய்ய வேண்டியதெல்லாம் இடைவிடாத உழைப்பு. உழைப்பின் வியர்வைகளில் உள்ள உன்னதம் எதிலும் இல்லை. எனவே, உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொள்வீர்! இமயத்தையும் வெல்வீர்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக