திங்கள், 18 ஏப்ரல், 2022

எட்டாம் வகுப்பு கட்டுரை- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

 

எட்டாம் வகுப்பு கட்டுரை- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

முன்னுரை

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்று பாடுகிறார் காந்தியக் கவிஞர். கைத்தொழிலால் பொருளாதார நன்மை மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு, மன வளம் பேணுதல், பசுமைச் சூழல் பாதுகாப்பு போன்ற நன்மைகளும் விளைகின்றன. நமக்கு பிடித்த ஏதேனும் ஒரு கைத் தொழிலை கற்றுக் கொள்வதன் அவசியத்தை அலசுகிறது இக்கட்டுரை.


கைத்தொழில் என்பது

எளிய மூலப் பொருள்களைக் கொண்டு குறைந்த செலவில் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பயன்படும் பொருட்களைக் கைகளாலோ அல்லது எளிய கருவிகளின் துணை கொண்டோ உருவாக்குவதாகும். கைத்தொழில் ஒரு மரபு சார்ந்த தொழில் மட்டும் அன்று; கற்றுக் கொள்வதும் எளிது. நமது பாரம்பரியத்தோடு இரண்டறக் கலந்தது.


பல்வகைக் கைத்தொழில்கள்

பெரும்பாலான கைத்தொழில்கள் வேளாண் பொருள்கள் சார்ந்தவை. இயற்கையோடு இயைந்தவை. கூடை முடைதல், பாய் பின்னுதல், சிற்பம் வடித்தல், மட்பாண்டம் செய்தல், தேன் சேகரித்தல், மெழுகுப் பொருட்கள் தயாரித்தல், பனைப் பொருட்கள் தயாரித்தல், மூங்கில் பொருட்கள் தயாரித்தல், இரும்புக் கருவிகள் செய்தல், செப்புப் பாத்திரங்கள் செய்தல், வெண்கலப் பாத்திரங்கள் செய்தல் போன்றவை கைத்தொழில்கள் ஆகும்.


கைத்தொழில் கற்பதன் அவசியம்

கைத்தொழில் நம் மரபு, பண்பாடு சார்ந்த தொழில்களாகும். கைத்தொழில் கற்பதால் நமது பொருளாதாரத் தேவை பூர்த்தி அடைகிறது. போட்டி நிறைந்த உலகில் வேலைக்காக எங்கும் அலைய வேண்டியதில்லை. நமது உலகம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்புகளால் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. அதோடு, அவை வெளியேற்றும் கழிவுகளும் மலையளவு குவிந்து வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைகிறது. ஆனால், கைத்தொழில்களால் வெளியேறும் கழிவுகள் மிகவும் குறைவு. மேலும், அவை சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதில்லை.


கைத்தொழிலின் நன்மைகள்

கைத்தொழில் பலருக்கு வேலை தருகிறது; சுற்றுச்சூழல் நண்பனாகத் திகழ்கிறது. நாம் விரும்பும் நேரத்தில், ஓய்வு நேரத்தில் கைத் தொழிலில் ஈடுபடலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வழியில் கழிக்கலாம். மனத்திற்குப் பிடித்த கைத்தொழில் ஒன்றில் ஈடுபடும் போது நம் மனம் நிறைவு கொள்கிறது; ஆத்ம திருப்தி ஏற்படுகிறது; சிந்தை விரிவடைகிறது; கவலைகள் மறக்கப்படுகின்றன.


தொழிற்கல்வி

பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவியல் கல்வியோடு தொழிற் கல்வியும் கற்றுத் தரப்படுகிறது. இது மாணவர்களின் அறிவை வளர்ப்பதோடு அனுபவக் கல்வியையும் தருகிறது. “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற தாராபாரதியின் வரிகளை நினைவில் நிறுத்தி தொழிற்கல்வியில் பெற்றிடுவோம்.


முடிவுரை

மனித வாழ்வுக்குத் தேவையான அனைத்து அடிப்படைப் பொருள்களும் கைத்தொழில் மூலமாக உற்பத்தி செய்ய முடியும்போது அந்நிய நாடுகளை ஏன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? சிறுசிறு கைத்தொழில்களை நாமே செய்தால் சோம்பி இருத்தலால் ஏற்படும் நோய்கள் நம்மை அண்டாது. மேலும் நமது மன நலம் சிறப்படையும்; அந்நியச் செலாவணி மிச்சப்படும்; நம் நாடும் பொருளாதார வல்லமை பெற்றுத் திகழும். எனவே, கைத்தொழிலின் அருமையை அனைவரும் உணர வேண்டும். ஏதேனும் ஒரு கைத் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக