சனி, 16 ஏப்ரல், 2022

நாட்டுப்புற கைவினைக் கலைகள் இயல் 5, நெடுவினா

 நெடுவினா


தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.



தமிழகக் கைவினைக் கலைகள்

அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக் கலை என்கிறோம்

மண்பாண்டக் கலை

மிகவும் பழமையான கைவினைக் கலைகளில் ஒன்று மண்பாண்டக் கலை. களிமண்ணை நாள் முழுவதும் ஊறவைத்து, அதனுடன் மெல்லிய மணல் மற்றும் சாம்பல் கலந்து திருவையின் நடுவில் வைத்து, திருவையை வேகமாகச் சுழலச் செய்து, கையால் அணைத்துப் பிடித்து மண்பாண்டங்களை உருவாக்குவர்.

குடம், தோண்டி, கலையம், கடம், உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி என்பன மட்பாண்டங்கள் ஆகும்.

சுடுமண் சிற்பங்கள்

மண் பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும்.


மூங்கில் பொருள்கள்

மூங்கிலைக் கொண்டு பல வகையான கைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன. மட்டக்கூடை, தட்டுக் கூடை, கொட்டுக் கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத் தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, தட்டு, புல்லாங்குழல், கால்நடைக்கு மருந்து புகட்டும் குழாய் போன்ற பல பொருள்கள் மூங்கிலால் செய்யப்படுகின்றன.


பாய் பின்னுதல்

பாய்களில் பல வகை உண்டு. தடுக்குப் பாய், பந்திப்பாய்,திண்ணைப் பாய், பட்டுப் பாய், தொழுகைப்பாய், பாய்மரக் கப்பல்களில் பயன்படும் பாய் போல்வன.


பனையோலைப் பொருட்கள்

பனை ஓலைகளால் கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய் போன்றவை செய்யப்படுகின்றன. பனைமட்டை நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன.


பிரம்புப்பொருட்கள்

முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்தி, நட்டு வைத்திருக்கும் இருகடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி வளைத்து, பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்து வைத்து விட்டால் அப்படியே நிலைத்து விடும். பின்னர் அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும் சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருட்கள் செய்யப்படுகின்றன. கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத் தட்டு, அருச்சனைத் தட்டு, வெற்றிலைப்பெட்டி போன்றவை அவற்றுள் சில.


இவை மட்டுமல்ல. மண் பொம்மைகள் செய்தல், மரப் பொம்மைகள் செய்தல், காகிதப் பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர்த் தட்டு செய்தல், சந்தனமாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல், மாட்டுக் கொம்பினால் கலைப் பொருட்கள் செய்தல், சங்கு கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்கள் உருவாக்குதல் என இன்னும் பலவகையான கைவினைக் கலைகள் உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக