கல்வி அழகே அழகு
மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன் எது?
கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே
அழகுக்கு அழகு செய்வார்
-குமரகுருபரர்
பாடலின் பொருள்
முழுமையாக ஒளி வீசக்கூடிய மாணிக்கக் கற்களால் ஆன மாலைக்கு மேலும் அழகு கூட்ட வேறு அணிகலன் எதுவும் தேவையில்லை. அதுபோல, கல்வி கற்றோருக்குத் தான் கற்ற கல்வியே அழகு தரக்கூடியது. அது அல்லாமல் அவருக்கு அழகூட்ட வேறு அணிகலன்கள் எதுவும் தேவையில்லை என்பதாம்.
முற்றமுழு- ஒருபொருட்பன்மொழி
நலன்-அழகு
கலன்-அணிகலன்
அணிகலம்-ஈற்றுப் போலி
பூண்- அணிகலன்
மோனை நயம்
கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே
அழகுக்கு அழகு செய்வார்
எதுகை நயம்
கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற
முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே
அழகுக்கு அழகு செய்வார்
குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
இவர் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறிவிளக்கம் எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக