எட்டாம் வகுப்பு தமிழ் கட்டுரை -நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
முன்னுரை
“நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள், பாரத தேசத்தை மாற்றி காட்டுகிறேன்” என்றார் வீரத்துறவி விவேகானந்தர். “ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா” என்று அழைத்தார் மகாகவி பாரதியார். “வருங்காலத்தில் அதிக இளைஞர்களைக் கொண்ட தேசமாக இந்தியா இருக்கப்போகிறது. உலக அரங்கில் ஆற்றல், அறிவுத்திறன், உழைப்பு என எல்லாவற்றிலும் இந்திய வலிமை பெற்றுத் திகழப் போகிறது” என்றார் அப்துல் கலாம். இத்தகைய ஆற்றலுடைய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியில் எவ்வாறு பங்காற்ற முடியும்? என்பதை இக்கட்டுரை அலசுகிறது.
நாட்டுப் பணியில் ஈடுபட்ட முன்னோர்கள்
சுகபோக வாழ்க்கையை விரும்பாமல் நாட்டு விடுதலைக்காக தம் இளமைக் காலத்திலேயே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மோகன்லால் கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி ஆனார். சுப்பிரமணிய பாரதியார், திருப்பூர் குமரன், வீரமங்கை வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் வ உ சி, தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், நேதாஜி, பகத்சிங் எனப் பலரும் தமது இளமையை நாட்டிற்காக அர்ப்பணித்தனர்; வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தனர்.
இக்கால இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய நற்குணங்கள்
அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, பெரியவரை மதித்தல், ஊக்கமுடன் உழைத்தல், நாட்டுப் பணியில் பேரார்வம் மற்றும் தன்முனைப்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதர மனப்பான்மை ஆகிய நற்குணங்கள் இன்றைய இளைஞர்களின் மனத்தில் விதைக்கப்பட வேண்டும். தனி மரம் தோப்பாகாது; தனி மனிதன் சமூகமாக மாற முடியாது. “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு” என்ற பாரதியின் வரிகளை மனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் செய்ய வேண்டுவன
‘இளமையில் கல்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப ஆழமாகவும் விரிவாகவும் கற்க வேண்டும். “கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்ற பொய்யாமொழிப் புலவரின் வரிகளுக்கு ஏற்ப கற்றவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடன் சகோதர மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவைச்சங்கம், பசுமைப்படை, தேசிய மாணவர் படை போன்ற மாணவர் அமைப்புகளின் சேர்ந்து சமூக சேவை புரிய வேண்டும்; சமூகப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முடிவுரை
“மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்பார்கள். இளைஞர்களின் சக்தி அளப்பரியது. இளைஞர்கள் போதைப் பழக்கத்தில் ஈடுபடக்கூடாது; புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும். “இளைஞர்களுக்கு இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்” என்றார் விவேகானந்தர். எனவேதான் விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ஐ தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடி வருகின்றோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக